Saturday, April 25, 2020

அதிகளவு பணத்தை அச்சிடுதல் - யாருக்காக அரசு இந்த வேலையை செய்கிறது!!

1 கருத்துக்கள்


இந்த வாரம் 7.87 பில்லியன் ரூபாய்கள் பெறுமதியான பணத்தை அச்சிடப் போகும் சிறிலங்கா அரசானது இந்த வருடத்தில் இதுவரைக்கும் 217.1 பில்லியன் ரூபாய்கள் பெறுமதியான பணத்தை அச்சிட்டு சந்தையில் விட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக கொரோனாவின் தாக்கம் உச்சத்தை தொட்ட மார்ச் மாதத்திலிருந்து இதுவரைக்கும் அண்ணளவாக 213 பில்லியன் ரூபாய் பெறுமதியான பணத்தை அச்சிட்டு சந்தைக்குள் விட்டிருக்கிறது சிறிலங்கா அரசு. 

ஏற்கனவே கொரோனாவின் தாக்கத்தால் உற்பத்தித்துறை படு மோசமாக பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் பொருட்கள்  தேங்கிக்கிடப்பது மட்டுமல்லாது ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட பல பொருட்கள் விற்பனையின்றி காலாவதியாகி வீசப்படும் நிலையை எட்டிருக்கிறது. சிறிலங்காவைப் பொறுத்தவரை, அந்நிய செலாவணியை ஈட்டக் கூடிய துறைகள் பெரும்பாலானவை இழுத்து மூடப்பட்டுள்ளன. குறிப்பாக சுற்றுலாத்துறை, ஆடை உற்பத்தித் துறை, சிறு விவசாய உற்பத்திகள் என ஏற்றுமதிப் பொருளாதாரம் முழுமையாக அடிவாங்கியுள்ளது. ஏற்கனவே சிறிலங்காவின் தேயிலைப் பொருளாதாரம் உலகச் சந்தைக்கு நிகராக தன்னை மாற்றியமைத்து முன்னேற முடியாமல் சிக்கி விழி பிதிங்கி நிற்கும் இந்த நேரத்தில் அதிகளவிலான பணம் அச்சிடப்பட்டு சந்தையில் விட வேண்டிய தேவை எதற்கு?

உள்நாட்டு தேவைகளுக்காக உற்பத்தி செய்யப்படும் அத்தனை பொருட்களும் வழமையான நுகர்வின்றி தேங்கிக் கிடக்கிறது. ஏற்றுமதிப் பொருளாதாரமும் பெருமளவில் அடிவாங்கிக் கிடக்கிறது. அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கு வழியின்றி, வெளிநாடுகளில் வேலை செய்யும் இலங்கையர்களை வெளிநாட்டு நாணயத்திலேயே சிறிலங்காவில் சேமிப்பை வைக்கும் படியும் அதனை ஊக்குவிக்கும் முகமாக பல சலுகைகளையும் சிறிலங்கா அரசு அறிவித்திருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் அதிகளவிலான பணத்தை அச்சிடுவதன் நோக்கம் என்னவாகவிருக்கும் என்பதை ஆழமாக பார்க்க வேண்டிய தேவையிருக்கிறது. 

ஊரடங்கு, ஆடை உற்பத்தி மற்றும் விற்பனையின் மட்டுப்படுத்தப்பட்ட அல்லது முழுமையான தடை, சமைத்த உணவு பண்டங்களின் மட்டுப்படுத்தப்பட்ட அல்லது முழுடையான தடை, போக்குவரத்துத் தடை என அன்றாட பணச் சுழற்சிக்கான வழிகள் அனைத்து தடைப்பட்டு பணம் தேங்கிக் கிடக்கின்றமையானது ஆரோக்கியமான பொருளாதாரத்தை ஆட்டங்காண வைத்துள்ள நிலையில் மேலும் பணத்தை அச்சிட்டு தேக்கி வைத்திருக்க வேண்டிய தேவை என்ன? 

எதிர்காலத்தில் ஊரடங்கு நீக்கப்பட்டு அல்லது கொரோனாவின் பின்னரான காலத்தில், அச்சிடப்பட்ட அத்தனை பில்லியன் ரூபாய்களும் மக்களின் கையில் சென்று, உள்ளுர் பொருட்களின் உற்பத்திக்கு நிகரான நுகர்வு இல்லாமல் குறித்த பொருட்களுக்கு அதிகளவு கேள்வி எழும் போது அந்த பொருளின் கேள்வி விலை அதிகமாகும் அதனால் ரூபாயின் பெறுமதி இழக்கச் செய்யப்படும். 

உதாரணத்திற்கு பிறீமா கோதுமை மா உற்பத்தி நிலையம், வழமையாக மாதத்திற்கு 1000 கிலோ மாவை உற்பத்தி செய்து (இது தான் பிறீமாவின் ஆகக் கூடிய உற்பத்தி என்று வைத்துக் கொள்வோம்) 1000 கிலோ மாவும் நுகரப்படுகிறது என்றால் சாதாரணம்.  ஆனால் மக்களிடத்தில் வழமைக்கு மேலதிகமாக பணப்புழக்கத்தினால் 2000 கிலோ கோதுமை மாவிற்கான கேள்வி  எழுகிறது என்று வைத்துக் கொள்வோம், பிறீமாவால் 1000 கிலோதான் உற்பத்தி செய்ய முடியும் ஆனால் 2000 கிலோ கோமைக்கான கேள்வி, இதனால் கோதுமை மாவின் விலைதான் அதிகரிக்கும். 1 கிலோ கோதுமை மா 100 ரூபாய்க்கு விற்பனை செய்திருந்தால் இப்போது 200  ரூபாயாக விற்பனை விலை நிர்ணயிக்கப்படும். அதாவது 100ரூபாயின் பெறுமதி குறைக்கப்படுகிறது. (அதாவது 100% மேலான பணவீக்கம் ஏற்படும்.) இதன் மூலம் கோதுமையை மூலப் பொருளாக கொண்ட அத்தனை வணிகத்திலும் இதன் தாக்கம் ஏற்படும். இது போன்று அனைத்து துறைகளிலும் ஏற்படும். 

மாதம் 20,000 ரூபாயோடு குடும்பம் நடத்தியவர் பணவீக்கத்தால் குடும்பம் நடத்த முடியாமல் திண்டாடுவார். அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் சம்பள அதிகரிப்பு நிகழாது. சேமிப்பில் இருந்த பணத்தின் பெறுமதி குறைக்கப்படும். 

ஏற்கனவே வெளிநாட்டு கடனை மறைத்து நாட்டை ஆளும் அரசு,  நாட்டின் உற்பத்திப் பொருளாதாரம், ஏற்றுமதிப் பொருளாதாரம் இன்னபிற அந்நியச் செலாவணி ஈட்டும் வழிகள் மோசமாக பாதிக்கபட்டிருக்கும் நிலையில் பணவீக்கத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை என்ன என்பது  அரசுக்குத்தான் வெளிச்சம். 2007 களில் உருவான பொருளாதார சரிவு நிலையில் பணத்தை அச்சிட்ட வளர்ச்சியடைந்த நாடுகளே அந்த தாக்கத்தில் இருந்து மீண்டுவர மிகவும் போராடியமை குறிப்பிடத்தக்கது. 

தமிழர் தாயகம் இனியாவது திருந்த வேண்டும். அந்திய பொருட்களை நுகரும் பிண்டங்களாக இராமல் இனியாவது உற்பத்தித் துறைகளில் முதலீடுகளை செய்ய வேண்டும். 

மா.குருபரன்
25-04-2020


Saturday, April 18, 2020

கொரோனா போரும் அதன் பின்னரான வாழ்வும்!

0 கருத்துக்கள்



2019 மார்கழி மாதமளவில் சீனாவின் வூகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றுக் கிருமி, குறிப்பிட்ட சில மாதங்களுக்குள் உலகம் முழுவதும்  பரவி லட்சத்தை தாண்டி உயிர்களை பலியெடுத்துக் கொண்டிருப்பது மட்டுமல்லாது, அரசியல் மற்றும் பொருளாதார  இயக்கத்தில் பெரும் அடியைக் கொடுத்துள்ளது.  கொரோனா கிருமியின் பரவல் வெறும் இயற்கைத் தொற்று நோய் என்பதை மறுக்க இப்போது தான் உலகம் மெல்ல மெல்ல தலைப்பட்டுவருகிறது. 

அமெரிக்காவில் நிதி நிறுவனங்கள் தொடர்பான சட்ட மாற்றம் 2007-2008 காலப்பகுதிகளில்  அமெரிக்காவில் வீடு மனை மற்றும் கடனட்டை வர்த்தகத்தில் பெரும் இழப்புகளை ஏற்படுத்த, அது உலகளவில் நிதி நிறுவனங்களை ஆட்டம்காண வைக்க உலகமே பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டது மாத்திரமல்லாது காலப்போக்கில் அமெரிக்காவின் சண்டித்தனம் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தியது. 2007-2008 காலப்பகுதியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அப்போது "2ம் உலகப் போருக்கு பின்னர் ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடி" என பொருளாதார வல்லுனர்கள்  குறிப்பிட்டிருந்தாலும் அதனால் பங்குப் பரிவர்த்தனை முதலாளிகளும் அது சார்ந்த முதலீடுகள் மற்றும் அது சார்ந்த தொழிலாளிகளும் தான் நேரடியாக பாதிக்கப்பட்டனர். ஆனால் இப்போது கொரோனா கிருமியின் தொற்றால் ஏற்பட்டிருக்கும் அல்லது ஏற்படப்போகும் நெருக்கடியானது படு மோசமானதாக இருக்கப்போகிறது.  

கொரோனா கிருமியின் தொற்று நோயானது 3ம் உலகப்போர் என்று சொல்லும் அளவிற்கு தாக்கங்களை ஏடிற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பது மட்டுமல்லாது இந்த தொற்று நோய்க்கு பின்னரான காலப் பகுதியில் பொருளாதார நெருக்கடியானது எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதையே ஊகிக்க முடியாத அளவில் நிலமை நாளுக்கு நாள் நகர்ந்து கொணடிருக்கிறது. சர்வதேச அளவில் பொது அமைப்புகளை உருவாக்கி அதன் மூலம் நிதி உதவிகளைச் செய்து தேவையான நாடுகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமெரிக்காவின் சண்டித்தன அரசியல் ஆட்டம் காணப்போகிறது என்றே தோணுகிறது. 

* * * *
கொரோனா கிருமியின் உருவாக்கத்திற்கும், தொற்றின் பரம்பலுக்கும் சீனா மீது அமெரிக்கா தொடர்ச்சியாக வைத்துவரும் குற்றச்சாட்டுக்கள் சந்தேகங்களை உருவாக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. 

சீனாவின் வூகான் மாகாணத்தில் கொரோனா கிருமி உருவாகி பெரும் அழிவுகளை ஏற்படுத்தி சில வாரங்களிலேயே அது இத்தாலி மற்றும் ஈரான் நாடுகளை மோசமாக தாக்கியது. இங்குதான் கொரோனாவின் அரசியல் மெல்ல மெல்ல வெளிவர ஆரம்பித்தது. சீனாவின் பட்டுப்பாதை திட்டத்திற்கு, G7 நாடுகளின் கூட்டமைப்பில் முதலாவதாக ஆதரவளித்தது இத்தாலி நாடு . பட்டுப்பாதை திட்டத்தில் பெரும் நிலப்பகுதியும் தரைவழி ரயில் பாதைத் திட்டமும் ஈரானில் காணப்படுகிறது. இரண்டு நாடுகளிலும் சீனா தனது பட்டுப்பாதை திட்டத்திற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்து மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில் கொரோனாவின் தாக்கமும் பட்டுப்பாதை வழியாக மிக வேகமாக பரவியமையானது கொரோனாவின் அரசியல் குறித்து அனைவரையும் சிந்திக்க வைத்திருக்கும். 

தற்போது பட்டுப்பாதையில் கொரோனாவின் தாக்கம் குறைந்துவரும் அல்லது கட்டுப்படுத்தப்பட்டுவரும் அதேசமயத்தில், அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் பட்டுப்பாதையில் ஏற்படுத்திய தாக்கத்தைவிடவும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இலகுவாக சொல்வதென்றால் இந்த நிலமையானது "எதிரியின் ஆயுதத்தை கைப்பற்றி அதே ஆயுதத்தால் மிக உக்கிரமாக எதிரியை தாக்குவது" போன்றது. தற்போது அமெரிக்க அரசு நிலமையை கையாள முடியாமல் திணறும் அளவிற்கு எல்லை மீறிச் சென்றுள்ளது. 2020 தை மாத கடைசிகளில் கொரோனாவின் தாக்கம் பெரியளவில் கண்டிறியப்பட்ட நேரத்தில், அமெரிக்க அதிபர் ரம்ப் "கொரோனாவால் அமெரிக்காவை நெருங்க முடியாது" என்ற தொனிப்பொருளில் பல அறிக்கைகளை வெளியிட்டிருந்தாலும் தற்போது நிலமை எல்லைமீறிப் போக சீனா மீதும் உலக சுகாதார நிறுவனத்தின் மீதும் கடும் குற்றச்சாட்டுகளை வைத்துவருகிறார். உச்சக்கட்டமாக, சீனாவின் வூகான் மாகாணத்தில் இயங்கிவரும்  நுண்ணுயிர் ஆய்வுகூடம் ஒன்றிற்காக அமெரிக்காவில் இரகசியமாக பணியாற்றி வந்த அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பேராசிரியர்/விஞ்ஞானி ஒருவர், அமெரிக்க உள்ள புலனாய்வு அமைப்பான FBI ஆல் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கசியவிடப்பட்டுள்ளன (உண்மை உறுதிப்படுத்தப்படவில்லை).

ஆக, கொரோனா கிருமியின் தொற்றானது ஏற்கனவே திட்டமிடப்பட்ட தாக்குதல் திட்டமாக இருக்கலாம். அமெரிக்காவும் சீனாவும் நன்கறிந்து வைத்திருந்த போர்த் திட்டத்தை யார் முதலில் ஆரம்பிப்பது என்ற போட்டியில் தவறுகள் நடந்திருக்கலாம் அல்லது முதலில் கொரோனா கிருமிப் போரை தொடங்கியவரின் திட்டத்தில் ஏதாவது தவறுகள் நிகழ்ந்திருக்கலாம். எது எப்படியோ இது நூறு சதவீதம் இயற்கையால் உண்டான அழிவல்ல என்பது மாத்திரமே உண்மை. 

*        *        *      * 
இனி என்ன நடக்கும்

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாகக்க உண்டாக்கப்பட்ட "சமூக இடைவெளி" இந்த தொற்றின் தாக்கம் முடிவடைந்ததன் பின்னர் சமூகத்திற்குள் பெரும் "பொருளாதார சமூக இடைவெளியை" உருவாக்கப்போகிறதென்பதே உண்மை. 

இரண்டு மாதத்திற்கும் மேலாக அநாவசிய செலவுகளிலிருந்து விடுபட்டிருந்த நடுத்த வருமான குடும்பங்கள் மேலதிக சேமிப்புகளோடும், சேவை வழங்கும் தொழில்களில் மற்றும் அத்தியாவசியப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த வர்த்தகக் குடும்பங்கள் வழமையைவிட அதிகமான வருமானத்தோடும், மருந்து உற்பத்தி வர்த்தகர்கள் அதிகளவு லாபத்துடனும் காணப்படும் அதே வேளையில், தினசரி கூலியில் வாழ்ந்த மக்கள் இருந்த சொற்ப சேமிப்பையும் இழந்து, எதிர்கால வேலைக்கான உத்தரவாதமும் இன்றி இக்கட்டான நிலைக்குக்கு தள்ளப்படுவர். 

தவிர இந்த ஊரடங்கு காலப்பகுதியில் பெருமளவிலான தனியார் நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்கு குறைந்த சம்பளத்தை வழங்கி,  தொழினுட்பத்தை பயன்படுத்தி தேவையாள அளவு வேலையை வாங்கிவருகிறார்கள். அதாவது தொழினுட்பத்தை பயன்படுத்தி குறைந்த அளவு சம்பளத்துடன் வேலையை செய்து முடிக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. உணவு மற்றும் மருந்துவ உற்பத்தித் துறையைத் தவிர அனைத்து உற்பத்தித் துறைகளும் முடங்கியுள்ளன. 

உற்பத்தித் துறையின் முடக்கத்தால் வீழ்ந்த பொருளாதாரத்தை ஈடு செய்யும்வரை பண வீக்கத்தை அரசாங்கங்களால் கட்டுப்படுத்த முடியாத நிலையை தோன்றும். இந்த நிலை உலக அரசியல் ஒழுங்கில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். 

இயற்கை அழிவிற்கு பின்னரான அரசியலும் போருக்கு பின்னரான அரசியலும் வெவ்வேறானவை.  கொரோனா  தொற்று நோய் வெறும் நோயல்ல.. இது ஒரு வகையான உலகப் போர். கொரோனா தொற்றின் பின்னரான அரசியலும் பொருளாதாரமும் ஒரு உலகப் போருக்கு பின்னரான அரசியல் மற்றும் பொருளாதாரம் போலவே இருக்கும்.  

மா.குருபரன்
18-04-2020





Wednesday, January 11, 2017

எனது பென்சில் - 2

0 கருத்துக்கள்
நேரம் கிடைக்கும் போதெல்லாம் புதுசு புதுசா முயற்சி செய்து பார்க்கணும் :)


2015 இல் முயற்சி செய்த சில ஓவியங்கள்.







மா.குருபரன்


Monday, January 9, 2017

மாணவர்களின் முதிர்ச்சியின்மையை விளம்பரமாக அறுவடை செய்யும் ஊடகங்கள்

2 கருத்துக்கள்
அடிப்படைக் கல்வித் தகுதியற்ற அல்லது அடிப்படை ஊடகவியல் பயிற்சியற்ற பலர், ஊடகம் நடத்தும் துர்ப்பாக்கிய சூழல் இன்று தமிழ்த் தேசிய பரப்பில் அரங்கேறிவருகிறது. 

தரம் 5 பரீட்சையில் சித்தியெய்திய மாணவனிடம் உனது எதிர்கால இலட்சிம் என்ன என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. இதே கேள்வியை கேட்கும் ஊடகவியலாளர்கள் தரம் 5 இல் தாங்கள் படிக்கும் போது எப்படியான பதிலை கொடுத்திருந்தார்கள் என்பதை ஒரு போதும் வெளிப்படுத்தியதில்லை. 

( நான் தரம் 5 இல் படிக்கும் போது, இன்ஜினியர் என்றால் இன்ஜின் திருத்துபவர் என்றுதான் சொல்லுவேனாம். இன்ஜினியர் என்றால் என்ஜின் திருத்துபவர் என்ற எண்ணம் இருந்ததே போதுமென்று நினைக்கிறேன்)

தென்னிலங்கை கல்விச் சூழலிலோ அல்லது வேறெந்த கல்விச் சூழலிலுமோ இல்லாத திணிப்பும் கட்டியெழுப்பப்படும் விபரீதமான மாயைகளும் தமிழ்ச் சூழலில் அதிகம். 

தேசிய பரீட்சைகளில் சித்தியெய்தும் மாணவர்கள், வெறுமனே பரீட்சைக்கு பட்டை தீட்டப்படும் கல்விச் சூழலில் இருந்து வெளியே வருபவர்கள். சமூகம் மற்றும் ஊடகங்களை கையாளும் முறைபற்றிய முதிர்ச்சியற்றவர்கள். இப்படியான முதிர்ச்சி அற்றவர்களை உசுப்பேற்றி, அவர்களின் உணர்ச்சிகளை விளம்பரப்படுத்தி இன்பம் காணும் ஊடகவியலாளர்கள் யாரென்று பார்த்தால் அவர்கள் அடிப்படை ஊடக கல்வியைக் கூட முடித்திராதவர்களாய் இருப்பார்கள். 

ஒருவன் தான் நினைப்பதை அப்படியே மக்களிடம் சொல்வதற்கு ஊடகம் தேவையில்லை. ஒரு முச்சக்கர வண்டியில் லவுட்ஸ் பீக்கரை கட்டிக் கொண்டு ஊர் ஊராக சென்று ஒப்பாரி வைக்க முடியும். 

ஆனால் ஊடகம் என்பது, எதை எப்படி சொல்ல வேண்டும் என்ற அடிப்படை நெறிமுறை (ethics) கொண்ட துறை. இந்த அடிப்படை நெறிமுறை தெரியாத தறிகெட்டவர்களால்தான் இன்று ஏராளமான சமூகப் பிரச்சினைகள் உருவாகின்றன

அண்மையில் வெளியாகியிருக்கும் உயர்தரப் பரீட்சை முடிவுகள் தொடர்பில், சித்தியெய்திய மாணவர்களை பேட்டிகண்டு வெளியிட்டது தமிழ்வின் மற்றும் DAN TV என்கிற ஊடகங்கள். ஆரம்பத்தில் செய்திக் களமாகவும் கட்டுரைகளின் களமாகவும் இருந்த தமிழ்வின் இன்று விளம்பர ஊடகமாக மாறியிருக்கிறது. DAN TV பற்றி சொல்லவே தேவையில்லை. இவர்கள் யார் என்பது ஊரறிந்த உண்மை. இப்படியான விளம்பர ஊடகங்களிற்கு பரபரப்பு முக்கியம். 

இப்படியான பரபரப்பிற்கு, உயர்தரத்தில் சித்தியெய்திய மாணவர்களை பேட்டி கண்டு வெளியிடுவது புது றென்ட் (trend). 

இந்த வகையில், உயிரியல் தொழினுட்பப் பிரிவில் கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாவது இடத்தைப் பிடித்த உருத்திரபுரத்தைச் சேர்ந்த மகேந்திரன் தார்த்திக்கரன் என்ற மாணவனின் பேட்டியை வெளியிட்டு அதி உச்ச லாபம் அடைந்தது தமிழ்வின் மாத்திரமல்ல முகநூல் போராளிகளும்தான். 

தரம் 11 வரைக்கும் தரமான கல்வியைக் கொடுத்து, உயர்தரம் செல்வதற்கான பாதையை அமைத்துக் கொடுத்த பாடசாலை சமூகம் மீது மகேந்திரன் தார்த்திக்கரன் பாரிய குற்றச்சாட்டுகளை சுமத்துவது போன்றதான கானொலி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அந்த பாடசாலை சமூகம் மீதும் முகநூல் புரட்சியாளர்கள் வசைபாடும் நிலையை ஏற்படுத்தியது. 

உருத்திரபுரம் என்பது மிக நெருக்கமான நட்பு வட்டத்தை கொண்ட, எல்லோரையும் உறவுகளாக மதிக்கும் பண்பு கொண்ட பாரம்பரிய கிராமம். எல்லோருடனும் உரிமையுடன் நட்பு கொண்டாடவும் கோபித்துக் கொள்ளவும் முடியுமான கிராமம். இந்த கிராமத்தில் இருக்கும் பாடசாலைகளில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையிலான நட்பும் உறவு நிலைகளும் வெறும் மாணவர் ஆசிரியர் என்ற நிலைக்கு அப்பாலானது. 

நான் கூட அடிவாங்காத ஆசிரியர்களோ திட்டுவாங்காத ஆசிரியர்களோ கிடையாது. வீட்டில் எப்படி தமது பிள்ளைகளை, தமது சகோததர்களை அதட்டுவார்களோ, திட்டுவார்களோ அதே போல்தான் பாடசாலையிலும் திட்டுவார்கள் அடிப்பார்கள். அதற்காக அவற்றையெல்லாம் மனதில் வைத்திருக்க வேண்டிய தேவையில்லை. இன்றைக்கு செமையாக அடித்துவிட்டு அடுத்தநாள் எதுவுமே நடக்காதது போல் உறவாடக்கூடிய சொந்தங்கள் நிறைந்த சமூகம்தான் உருத்திரபுரத்தில் உள்ள பாடசாலைச் சமூகங்கள்.

தவிர உருத்திரபுரத்தில் உள்ள பாடசாலைச் சமூகங்களானது மிக அர்ப்பணிப்புடன் செயற்படும் சமூகங்கள். ஊடகங்கள் தகவல்களை வெளியிட முன்னர் அவற்றை உறுதிப்படுத்த வேண்டும்.

தமது பரபரப்பிற்காக மகேந்திரன் தார்த்திக்கரனின் பேட்டியை வெளியிட்ட ஊடகங்கள், மகேந்திரன் தார்த்திக்கரன் குற்றம் சாட்டியிருக்கும் பாடசாலையில் இருந்து அறிக்கை பெற்று அந்த மறுப்பையும் வெளியிடுமா?

இந்த வீரகேசரி நிருபர் எஸ்.என்.நிபோஜனுக்கு உருத்திரபுரத்தைப் பற்றி என்ன தெரியும் என்று தெரியவில்லை. 
(" 'நீ உருப்பிட மாட்டாய்' என்ற அதிபருக்கு மாணவன் கொடுத்த பதிலடி" இப்படி போட்டிருக்கினம். தார்த்திக்கரன் தான் பதிலடி கொடுப்பதாக எங்காவது சொல்லியிருக்கிறானா? இந்த ஊடகவியலாளர் அடைமொழியை சேர்த்திருக்கிறாரா? )


விடையத்திற்கு வருகிறேன்!

மகேந்திரன் தார்த்திக்கரன், ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் மதனளவில் பாதிக்கப்ட்டிருக்கலாம் அதற்காக பழி போடும் விதமான பேச்சுக்கள் வரவேற்கத்தக்கவை அல்ல. இது இந்த வயதில் எழக் கூடிய உணர்ச்சிகர சம்பவம் என்றாலும், தனக்கான அடிப்படைக் கல்வியை ஊட்டி உயர்தரத்திற்கு அனுப்பிவைத்த பாடசாலைச் சமூகத்தின் மீதான காழ்ப்புணர்ச்சியில்தான் தான் கல்வி கற்றேன் என்பது போன்றதான முதுர்ச்சியற்ற பேச்சுக்களை ஊடகம் வெளியிடுகவை தவிர்த்திருக்க வேண்டும்.

தனது முதிர்ச்சியற்ற கருத்தை நினைத்து மகேந்திரன் தார்த்திக்கரன் பின்னர் வருந்தக் கூடும் ஆனால் தனது கருத்தை பரபரப்பாக்கி அறுவடை செய்த ஊடகத்தின் மீதோ, ஊடக கல்வியற்ற ஊடகவியலாளர் மீதோ எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது போகும். 

தரம் 5 பரீட்சை, தரம் 11 பரீட்சை, உயர்தரப் பரீட்சை போன்றவற்றில் சித்தியெய்தும் மாணவர்கள் ஊடகங்களை சந்திப்பதை தவிர்க்க வேண்டும். பெற்றோர்கள் அவற்றை அனுமதிக்கக் கூடாது. 

ஊடகம் என்பது மிக நுட்பமான, நேர்மையாக மிக முதிர்ச்சியுடன் செய்ய வேண்டிய கலை. 

விபத்துகளில் இரத்தம் வழிய சிதைந்து கிடக்கும் உடலங்களின் புகைப்படங்களை பிரசுரிக்கும் போது "இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்" என்று போட வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லா மடையர்கள்தான் தமிழ் ஊடகப்பரப்பில் அதிகம். எனவே மாணவர்கள் தமது உணர்ச்சிகளை ஊடகங்களில் கொட்டக் கூடாது. 


அறிவும் முதிர்ச்சியும் தான் சரியான பதிலை கொடுக்கும். அவசரமும் சிறுபிள்ளைத் தனமான ஆதங்கங்களும் அறிவை மறைக்கும். 


மா.குருபரன்
09-01-2017

தகவல் தொடர்ச்சி

இது தொடர்பான முகநூல் விவாதங்கள்:  https://www.facebook.com/mkuru21/posts/10154361148962998

குறிப்பு: தமிழ்ச்செல்வன் என்ற ஊடகவியலாளர், //உருத்திரபுரம் பாடசாலையில் உள்ள சில ஆசிரியா்கள் மற்றம் எள்ளுககாட்டில் வாழக்கின்ற சில மக்கள் ஆகியோரின் கருத்துக்களுக்கு பின்பே தார்த்திகரனின் செய்தி ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.// என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதாவது இது நன்கு திட்டமிடப்பட்டடே தார்த்திகரனை குறிவைத்திருக்கிறார்களா என்றே சந்தேகம் எழுகின்றனது. 

ஆசிரியர்கள் மற்றும் மக்களின் கருத்தை வெளிப்படையாக வெளியிடாமல், ஒரு மாணவனை குறிவைத்து இந்த ஊடக வியாபாரம் நகர்ந்திருக்கிறது. எனவே எதிர்வரும்காலங்களில் பெற்றோர்கள், பெரியவர்கள் இந்த குறைகுடங்களாக இருக்கும் ஊடகவியலாளர்களிடம் இருந்து மாணவர்களை காப்பாற்ற வேண்டும். 

தவிர:

11-01-2017 அன்று முகநூல் பக்கங்களில் இடம்பெற்ற முக்கிய கருத்துப்பரிமாற்றங்களை கீழே இணைத்துள்ளேன்.

சம்மந்தப்பட்ட ஊடகவியலாளர்களின் முகநூல் விளக்கங்களும் அதற்கான எனது பதில்களும் கீழே உள்ளன.










Kuruparan M Kuru: மேலே குறிப்பிட்டிருக்கும் பதிவுகளுக்கு உருத்திரபுரம் கிளிநொச்சி என்ற முகநூல் பக்கத்தில் நான் இட்ட பின்னூட்டம்:
...............................................................................................................

SN Nibojan www.kuruparanm.com என்பது முகவரியற்ற இணையம் அல்ல. இது என்னுடைய வலைத்தளம்.

உருத்திரபுரத்தின் மூலைமுடுக்குகளின் உணர்வுகளைத் தெரிந்த, இந்த நிலத்தின் பிள்ளை என்ற ரீதியில் உங்களின் நெறிமுறையற்ற ஊடகத் தன்மை குறித்து கேள்வி எழுப்ப அத்தனை உரிமையும் எனக்கு உண்டு.

தனிப்பட்ட ஒரு சிலரின் கருத்தை வைத்துக் கொண்டு, ஒட்டுமொத்த சமூகத்தையே கேள்விக்குப்படுத்துவது போன்றதான செய்திகளை புனையும் அற்பத்தனமான ஊடகவியலை உங்களுக்கு கற்பித்த நிறுவனம் எது என்று கூட கேள்வி எழுப்பும் உரிமை ஒவ்வொரு சராசரி மனிதனுக்கு இருக்கிறது என்ற தார்பரியத்தை உணர்ந்து கொண்டு கீழே வாசிக்கவும்.

1. இலங்கையின் பல பாகங்களிலும், பலதரப்பட்ட மக்களுடனும் பழகியவன் என்ற ரீதியில், இலங்கையின் பல தெருக்கள் பற்றிய கதைகள் கூட என்னிடம் இருக்கிறது. வாரம் ஒருமுறை பேட்டியெடுத்து அதை அப்படியே, சில அடைமொழிகளையும் சேர்த்து உங்களின் பத்திரிகையில் பிரசுரிப்பீர்களா? அல்லது அதுபற்றி ஆய்வு செய்து அதன் நம்பகத்தன்மை மற்றும் உள்ளடக்கங்களை புரிந்து கொண்டு, ஊடகவியலாளராக அதை கையாண்டு பிரசுரிப்பீர்களா? எது முறை?

("நீ உருப்பட மாட்டாய்' என்ற அதிபருக்கு மாணவன் கொடுத்த பதிலடி" என்று தலைப்பிட்டிருக்கிறீர்கள்.. தார்த்திக்கரன் இது தனது பதிலடி என்று உங்களிடம் சொன்னான? அல்லது நீங்கள் அடித்துவிட்ட அடைமொழியா?

கடந்தகாலங்களில் வீரகேசரி ஊடகம் இப்படியான அற்பத்தனமான செய்திகளை வெளியிட்டமை மிக அரிதென்றே நம்புகிறேன்)

2. எல்லாக் கிராமங்களிலும், எல்லா மக்களும் 100 வீதம் திருப்திகரமாக வாழ்வது கிடையாது. தனிப்பட்ட ரீதியில் யாரிலாவது ஆதங்கத்துடன் வாழ்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.
ஏன் உங்கள் மீது, உங்கள் ஊடக நெறிமுறை மீது கூட விமர்சனங்கள் இருக்கின்றன. Murukaiya Thamilselvan தமிழ்ச்செல்வண்ணை மீது கூட ஏராளமான விமர்சனங்கள் இருக்கின்றன. தமிழ்ச்செல்வண்ணையின் செய்தி எழுதும் முறை, அதன் நம்பகத்தன்மை மற்றும் தொடர்ச்சித் தன்மை மீது கூட பலரிடம் ஏராளமான விமர்சனங்கள் இருக்கின்றன. அதற்காக உங்கள் மீது வைக்கப்படும் எல்லாக் குற்றச்சாட்டுகளும் உண்மை என்றோ அல்லது உங்கள் மீது குற்றம் சுமத்துபவர்கள் காணொளிகளை தயாரித்து பிற ஊடகங்களில் அவற்றை நேரடியாக வெளியிடுவதோ ஊடக தர்மம் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

3. கிளிநொச்சி மீதான உங்கள் அக்கறை பாராட்டத்தக்கது. அக்கறை என்பது, ஆய்வுகளற்றவிதத்தில் தனிப்பட்ட கருத்துக்களை குழப்பகரமாக வெளியிடுவதல்ல. அக்கறையை வெளிப்படுத்துவதற்கென்று ஒரு அறம் இருக்கிறது. அதை ஊடகங்கள் செய்யும் போது மிக அவதானமாக இருக்க வேண்டும் என்பதே ஊடக கல்வியின் நெறிமுறை.
தனிப்பட்டவர்கின் குற்றச்சாட்டுகளை பதிவுபண்ணி, அடைமொழிகள் சேர்த்து அதை அப்படியே வெளியிடுவதற்கு பெயர் ஊடகவியல் அல்ல என்பது எனது தனிப்பட்ட கருத்து.

4. முகத்திரையை கிழிப்போம், திரைச்சீலையை கிழிப்போம் என்று உணர்ச்சிவசப்படாமல், நீண்டகாலம் எழுத்து ஊடகத்துறையில் பணியாற்றும் அனுபவம் மிக்க ஊடகவியலாளர்களை அணுகி, தனிப்பட்டவர்களின் குற்றச்சாட்டுகளை எப்படி ஊடகப்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை பெறுங்கள். அதுதான் இந்த சமூகத்திற்கு சிறந்த ஊடகவியலாளர்களை உருவாக்கும்.

நன்றி. .

Murukaiya Thamilselvan: Kuruparan M Kuru என் மீதான ஆக்கபூர்வமான விமர்சனங்களை நான் எப் போதும் நிராகரித்தது கிடையாது. அதேவேளை எனது செய்திகளின் நம்பகத் தன்மையில் நான் எப்பொழுதும் கவனமாகவே இருக்கிறேன். முக்கியமாக சமூக ஏற்றத்தாழவுகளுக்கு எதிராக சமூக நீதிக்காக எழுவதற்காக நான் யாருடைய முகத்தையும் பாா்ப்பது இ்ல்லை. என்னுடைய செய்தியில் நம்பகத்தன்னை இல்லை என்றால் அதனை ஆதாரத்துடன் குறிப்பிடவேண்டுமே தவிர மேலோட்டமாக அல்ல. இதனை தவிர மகேந்திரன் தார்த்திகரனின் சம்பவத்தை இல்லை என்று வாதிடுவதில் அா்த்தமில்லை என்றே கருதுகிறேன். உருத்திரபுரம் பாடசாலையில் உள்ள சில ஆசிரியா்கள் மற்றம் எள்ளுககாட்டில் வாழக்கின்ற சில மக்கள் ஆகியோரின் கருத்துக்களுக்கு பின்பே தார்த்திகரனின் செய்தி ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.


Kuruparan M Kuru: //உருத்திரபுரம் பாடசாலையில் உள்ள சில ஆசிரியா்கள் மற்றம் எள்ளுககாட்டில் வாழக்கின்ற சில மக்கள் ஆகியோரின் கருத்துக்களுக்கு பின்பே தார்த்திகரனின் செய்தி ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.//

அப்படியாயின் அந்த கருத்தை முதலே வெளியிடாமல் தார்த்திகரன் என்ற சிறுவன் மூலமாக ஊடக வியாபாராம் செய்யப்பட்டதை எப்படி பார்ப்பது?தார்த்திகரன் அதிபருக்கு "பதிலடி" கொடுத்தாக எழுதியுள்ளார்கள். தார்த்திகரன் தான் பதிலடி கொடுத்ததாக சொன்னானா? அல்லது அந்த ஊடகவியலாளரின் அளவுக்கு மிஞ்சிய கற்பனையா? (தமிழ்நாட்டு ஊடகங்களைப் போலான அடைமொழிகள்)

Murukaiya Thamilselvan: தார்த்திகரன் சொன்னதன் பின்புதான் சில ஆசிரியர்களுடனும், சில மக்களுடனும் ஊடகவியலாளா்கள் தொடா்பு கொண்டு இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றதா என்பதனை ஆராய்ந்தாா்கள் அவா்களின் ஆய்வின் படி தார்த்திகரனின் சம்வம் உறுதிப்படுத்தப்பட்டது

Kuruparan M Kuru அப்படி சம்பவங்கள் நடைபெற்றிருப்பின் அதை பொறுப்புவாய்ந்த சக்திகள் மூலம் வெளிக்கொண்டிருந்திருக்க வேண்டும். உறுதிப்படுத்திய ஆசிரியர்கள் மற்றும் மக்களை ஆதாரங்காட்டி செய்தி வெளியிட்டிருக்க வேண்டும்.

ஆசிரியரை ஆதாரம் காட்டி செய்தி வெளியிடுவதைவிடுத்து, சிறுவனை ஆதாரம் காட்டி செய்தி வெளியிடுவது அற்பத்தனமான செயல் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

Murukaiya Thamilselvan : ஒரு ஊடகவியலாளனின் செய்தியை ஆராய்ந்து பிரசுரிப்பதா இல்லையா என்று தீா்மானிப்பது ஊடக நிறுவனங்களின் பிரதம ஆசிரியரின் பொறுப்பு. சரி உங்களின் கருத்துப்படி நாங்கள் முதிர்சியற்று செய்தி எழுது அனுப்பியிருந்தாலும் கூட அதனை பிரசுரித்த பல தசாப்த கால அனுப்வம் கொண்ட தேசிய ஊடகங்களின் ஆசிரியா்களும் முதிர்ச்சியற்றவா்கள்? குறித்த தார்த்திகாரனின் செய்தியை அனைத்து அச்சு மற்றும் இலத்திரணியல் ஊடகங்கள் வெளியிட்டன. எனவே உங்கள் ஒரு சிலரை தவிர அனைத்து சிங்கள ஆங்கில தமிழ் ஊடகங்களின் ஆசிரியா்களும் செய்தியாசிரியா்களும் முதிர்ச்சியற்றவா்களா? சமூக பொறுப்பற்றவா்களா?

Kuruparan M Kuru : "முந்திக் கொண்டு செய்தி வெளியிடுதல்" என்ற அற்பத்தனமான விளம்பரத்திற்காக செய்தியின் உள்ளார்ந்தம் மற்றும் சமூகப் பொறுப்புக் குறித்து குறிப்பிட்ட செய்தி நிறுவனம் அக்கறை செலுத்தவில்லை என்றே கருகிறேன்.

Murukaiya Thamilselvan : உங்களின் கருத்துப்படி இது முந்திக்கொண்டு வெளியிடும் ஒரு செய்தி அல்ல. இதனை தவிர பிரபல ஆங்கில ஊடகம், பிரசித்திப்பெற்ற சிங்கள ஊடகம் எல்லாம் இந்தச் செய்தியை பிரசுரித்துள்ளன. இதில் பணியாற்றுகின்ற பிரதம மற்றும் செய்தியாசிரியா்கள் அனுபவம் வாய்ந்த பிரபல்யமானவா்கள் எனவே உங்களின் பார்வையில் அவா்களும்....?

Kuruparan M Kuru : அந்த பிரசித்திபெற்ற சிங்கள மற்றும் ஆங்கில ஆசிரியர்களிடம் உருத்திரபுரம் மற்றும் எள்ளுக்காடு பற்றி என்ன தெரியும் என்று விசாரியுங்கள். இந்த கிராமத்தில் வாழும் மொத்த சனத்தொகையே தெரிந்திராதவர்களாகத்தான் இருப்பார்கள்.

பொதுவாக மேலதிகாரிகள் தமக்கு கீழுள்ளவர்களை அதிகம் நம்பும்போது இப்படியான தவறுகள் இடம்பெறுவது வழமை. உங்களுக்கும் தெரியும்.

Murukaiya Thamilselvan:  ஒலி மற்றும் ஒளி பதிவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை நீங்கள் மீண்டும் மீண்டும் இல்லை என நிரூபிக்க முயற்சி செய்கின்றீா்கள் அது உங்கள் ஊா் மீதான சுயநலமாக இருக்கலாம் சில ஆசிரியா்களும் சம்பவத்தை ஊடகவியலாளா்களிடம் உறுதிப்படுத்தியுள்ளனா். எனவே ஊடகவியலாளா்களின் தங்களது கடமையின் பொருட்டு சம்பவத்தை உறுதிப்படுத்தினாா்கள். அதனை அவா்களது பிரதம ஆசிரியர்களும் நம்பினாா்கள். செய்தி வெளிவந்தது. ஊடகம் ஒரு செய்தியை வெளியிடும்போது குறித்த செய்திக்குரியவா் நீதி மன்றம் சென்றால் என்னிடம் என்ன ஆதாரம் இருக்கிறது என்று தன்னை ஒரு தடவை உறுதிப்படுத்திக்கொண்டுதான் செய்தியை வெளியிடும் அந்தவகையில் அந்ததந்த ஊடக நிறுவனங்களில் அதாரங்கள் போதுமானதாக உள்ளது

Kuruparan M Kuru உறுதிப்படுத்திய ஆசிரியர்களின் காணொளியை வெளியிடாமல் சிறுவனின் காணொளியை வெளியிட்டதன் பின்னணி என்ன?

Kuruparan M Kuru //உருத்திரபுரம் பாடசாலையில் உள்ள சில ஆசிரியா்கள் மற்றம் எள்ளுககாட்டில் வாழக்கின்ற சில மக்கள் ஆகியோரின் கருத்துக்களுக்கு பின்பே தார்த்திகரனின் செய்தி ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.//

இப்படி மேலே சொல்லியிருக்கிறீர்கள், அப்படியாயின் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கும் ஆசிரியரின் காணொளியையை அல்லவா முதலில் வெயியிட்டிருக்க வேண்டும்.?

Murukaiya Thamilselvan ஊடகவியலாளா்கள் எப்பொழுதும் செய்தி மூலத்தை காட்டிக்கொடுக்க மாட்டாா்கள். ஊடகதர்மம் ஊடக நெறிமுறை பற்றி அறிவுரை சொன்ன உங்களுக்கு அது தெரியாதா?

Murukaiya Thamilselvan கானொளி என்பது சம்பவத்தை உறுதிப்படுத்த எங்களுக்காக எடுக்கப்பட்டது. அது ஏனையவா்களுக்கு காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

Kuruparan M Kuru ஓ.. ஆசிரியரை காட்டிக் கொடுக்க முடியாது, முதிர்ச்சியற்ற சிறுவனை காட்டிக் கொடுப்பதுதான் ஊடக தர்மமா??

நன்றி தமிழ்ச்செல்வண்ண. இதை தான் எதிர்பார்த்திருந்தேன். இனி இதில் விவாதிக்கக்த் தேவையில்லை. நன்றி :)

Murukaiya Thamilselvan சிறுவன் அல்ல இளைஞன் அந்த இளைஞன் செய்தி மூலம் அல்ல செய்திக்குரியவன் பாதிக்கப்பட்டவன். இந்த விளக்கம் கூட இல்லையா? செய்தி மூலம்தான் ஆசிரியா்களும் சில மக்களும்


முகுந்தன் நவம் வடமாகாணத்தில் வெளிவரும் பத்திரிகைகளில் இந்த செய்தி வெளியாகியிருந்தால், அவற்றை யாராவது இணைக்க முடியுமா?

Murukaiya Thamilselvan முகுந்தன் நவம் நீங்கள் வட மாகாணத்தில் இருந்திரு்தால் இந்தக் கேள்வியை கேட்டிருக்க மாட்டீர்கள் கடந்த ஞாயிறு உதயன் முன்பக்கச் செய்தி, மற்றும் யாழ் தினக்குரல் செய்தி எடுத்து பாருங்கள்

முகுந்தன் நவம் அதனால் தான் கேட்டேன். நான் பார்க்கிறேன்

Kuruparan M Kuru முகுந்தன் நவம் Copy Paste பண்றத பற்றி என்னண்ண பாக்க இருக்கு. Facebook status கள கூட ஒருபக்கத்தில பிரசுரிக்கிற வறட்சி நிலையிலதான் இன்றைய ஊடக trend இருக்கு.

இக்பால் அத்தாஸ், விக்டர் ஜீவன், தராக்கி இப்பிடி நிறையப் பேரின்ர பெயர் ஞாபகம் இருக்கிற அளவுக்கு ஊடகங்களுக்கு என்றொரு தர்மம் இருந்தது. தேடித் தேடி வாசிச்சம்.

"கிடைக்கும் தகவலை வைத்துக் கொண்டு எப்படி செய்தி சொல்வது" என்பது இங்க இருந்த ஒரு கலை அண்ண. கிடைக்கும் தகவலுக்கு அடைமொழி போட்டு அவதிப்பட்டு செய்தி போடுறது இப்பத்தைய fashion. :) :)


முகுந்தன் நவம் Kuruparan M Kuru உண்மைதான் ! அந்த மாணவனின் ஆதங்கம் உண்மையாக இருக்கலாம் . ஆனால் இந்த ஊடக செய்திகள் அவனை தன் வெற்றியை கொண்டாட முடியாதவனாக்கி விமர்சனத்துக்கு உள்ளாக்கிவிட்டன!




Friday, October 21, 2016

படிச்ச எல்லாரும் புத்திசாலிகளில்லை - புகையிலையும் வைத்திய அதிகாரி பா.நந்தகுமாரும்!!

0 கருத்துக்கள்


இன்று யாழ்மாவட்டத்தை போதைவஸ்துகளும், தடை செய்யபட்ட சிகரட்டுக்களும் தாராளமாக ஆக்கிரமித்திருக்கின்றன. இந்த நிலையில் தெல்லிப்பளை சுகாதாரப் பணிமனை வைத்திய அதிகாரி பா.நந்தகுமார் புகையிலை பயிர்ச் செய்கையை விவசாயிகள் கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறார்.

இங்கு கவனிக்க வேண்டியது!!

  • சிகரட் விற்பனை முகவர்களிடம்  அந்த தொழிலை கைவிட்டுவிட்டு வேறு தொழில் பார்க்குமாறு வைத்திய அதிகாரி நந்தகுமார் கோரவில்லை
  • சிகரட் விற்பனையாளர்களிடம் சிகரட் விற்பனையை நிறுத்துமாறு நந்தகுமார் கோரவில்லை.
  • ஏன் சிகரட் விற்பனைக்கு விதிக்கபட்டுள்ள கட்டுப்பாடுகளைக் கூட மிக இறுக்கமாக பின்பற்றுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் நந்தகுமார் கோரிக்கைவிடுக்கவில்லை. 


புகையிலைப் போர்

வட தமிழர்கள் மீது சிங்களவர்களுக்கு மோசமான காழ்ப்புணர்வு ஏற்படக் காரணம் புகையிலை வர்த்தகம். சிங்களவர்களைப் பொறுத்தவரை புகையிலை வர்த்தகம் என்பது அந்தஸ்திற்கான அடையாளமாக கருதினர்.

ஒல்லாந்தர்களால் பெரும் வர்த்தக பொருளாக
அறிமுகப்படுத்தப்பட்டு சந்தைக்கு கொண்டுவரபப்பட்ட புகையிலை வர்த்தகத்தில் யாழ்ப்பாண தமிழர்கள்தான் அதில் ஆதிக்கம் செலுத்துவதாக பெரும்பான்மை சிங்களவர்கள் கோபம் கொண்டிருந்தனர்.

புகையிலை பயிரிடுதல்  மற்றும்  அதை பதப்படுத்தி விற்பனைக்கு கொண்டுவருதல் என்பனவற்றில் யாழ்ப்பாண விவசாயிகளின் பொறிமுறையை சிங்களவர்களால் வீழ்த்த முடியவில்லை.

புகையிலை வர்த்தகத்தால் நாட்டின் பொருளாதார கட்டுமானத்தில் தமிழர்கள் பெரும் செல்வாக்குச் செலுத்திய காரணத்தால்தான் ஆங்கிலேயர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்திருந்ததாகவும், அதன் மூலம்தான் தமது நிலத்தைப் பாதுகாக்க "தேசவழமைச் சட்டத்தை" தமிழர்கள் கொண்டு வந்ததாகவும் சிங்களவர்கள் கருதினர்.

இலங்கையின் புகையிலை ஏற்றுமதியில் "யாழ்ப்பாண புகையிலை" முழு ஆதிக்கத்தையும் செலுத்தியது. அந்த முதலாளிகள் "செல்வாக்கு மிகுந்த தமிழர்களாக" உருவெடுத்திருந்தனர்.

இந்த பின்னணியில்தான் இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் தமிழர்களின் பொருளாதார அடித்தளங்களை சிதைக்க வேண்டும் என்பதில் சிங்களவர்கள் குறியாக இருந்தனர்.

1. யாழ்ப்பாண புகையிலையின் ஏற்றுமதி குறைக்கபட்டது.

2. உள்நாட்டு சந்தையைக் கூட பிடிக்க முடியாத பயிர்களை விவசாயம் செய்ய வட தமிழர்கள் ஊக்குவிக்கபட்டனர் அல்லது கட்டாயப்படுத்தபட்டனர்.

3. வட இலங்கை மரக்கறிகளுக்கான சந்தை சிறிது சிறிதாக முடக்கப்பட்டு "யாழ்ப்பாண மரக்கறிகள் யாழ்ப்பாணத்தில் மட்டும்தான் விற்கமுடியும் அதுவும் கஸ்டம்" என்ற நிலை உருவாக்கபட்டது.

4. வட இலங்கைச் சந்தைக்குள் பெருமளவு தென்னிலங்கை மரக்கறிகள் இறக்குமதி செய்யபட்டு குறைந்த விலையில் விற்கப்பட்டன.

இப்படி வட இலங்கை தமிழர்களின் பொருளாதாரம் சிறுகச் சிறுக சிங்களவர்களின் பிடிக்குள் சென்றது.

தமிழினம்த பெரும் பின்னடைவை சந்தித்தது. தமிழர்கள் மத்தியில் புதிய செல்வாக்கானவர்கள் உருவாகவில்லை, புதிய முதலாளிகள் உருவாகவில்லை. 

புகையிலை விவசாயம் செய்து செல்வாக்காக இருந்தவர்களின் குடும்பங்கள், விவசாயக் குடும்பங்கள் காலப் போக்கில் அரச வேலைகளின் அடிமைகளாக மாற்றபட்டனர். பெரும்பான்மை சிங்களவர்களின் கூலியாட்களாக மாற்றபட்டனர்.

ஆனாலும் தம்மை தாழ்த்திய புகையிலையை யாழ்ப்பாணத்தைத்தை விட்டு அடியோடு அகற்றியே ஆக வேண்டும் என்பது சிங்கள கோவிய சாதியினரின் வெறி. (சிங்களவர்களின் கோவிய சாதியினர்தான் செல்வாக்கு மிக்கவர்கள். தமது செல்வாக்கைக் கூட யாழ்ப்பாண புகையிலை தகர்த்தது என்பதுதான் அவர்களின் கோபம்) 



புகையிலை விவசாயமா உண்மையில் தடை செய்யப்பட வேண்டியது??

நூற்றாண்டுகாலமாக புகையிலை பயிரிட்டுவரும் யாழ்ப்பாணத்தில் புற்றுநோயால் பாதிக்கபட்டவர்களின் புள்ளிவிபரத்தை வைத்திய அதிகாரி பா.நந்தகுமார் வெளியிட வேண்டும். 

1996 களின் பின்னர் சிகரட் விற்பனையில் சூடுபிடித்த யாழ்ப்பாணம் 2009 ற்கு பிறகு உச்சகட்ட விற்பனையை பார்த்துவருகிறது.

எனவே புற்றுநோயால் பாதிக்கபட்டவர்கிளின் புள்ளிவிபரத்தை ஆண்டுரீதியாக வரிசைப்படுத்தி அந்த புள்ளிவிபரத்திற்கும் புகையிலை விவசாயத்திற்குமான தொரர்பு அறிவியல் ரீதியாக பேசப்பட வேண்டும்.

குறிப்பு: 2009ற்கு பிறகு வடபகுதியில் புற்றுநோய் அதிகரித்துள்ள நிலையில் அதுபற்றி விரிவான ஆய்வு நடத்தி பக்கச்சார்பற்ற வைத்திய அறிக்கையை வெளிப்படையாக மக்கள் மத்தியில் வெளியட இதுவரை யாரும் முன்வரவில்லை. 

  • 2010 காலப்பகுதியில் இலங்கையில் தடைசெய்யபட்ட சிகரட்டுக்களுடன் யாழ்ப்பாணத்தில் 2 முஸ்லீம் இளைஞர்கள் பொலிசாரால் பிடிக்கப்பட்டனர். ஆனால் அந்த இரண்டு இளைஞர்களுக்காகவும் சட்டத்தரணி சர்மினி வாதாடி விடுவித்தார். தடை செய்யபட்ட சிகரட்டுகள் எப்படி வந்தன? எங்கு விற்கபட்டன? ஏன் யாழ்ப்பாணத்தை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்? என்பது குறித்து எந்த தகவலுமே வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
  • சனத்தொகை கூடிய வட மாவட்டமான யாழ்ப்பாணத்தில் சிகரட் சந்தையை சுகாதார அமைச்சு எப்படி கட்டுப்படுத்தப் போகிறது என்பது குறித்து இதுவரை பகிரங்கமாக விவாதிக்கப்படவில்லை. (விவாதிக்கமாட்டார்கள். பெரும் வியாபாரிகளுடன் மோதிக்கொள்ளும் திராணி படித்தவர்களுக்கு இல்லை) 


உண்மையில் புகையிலை உற்பத்திதான் புற்றுநோய்க்கு காரணமா என்பதை அறிவியல் ரீதியாகவும் புள்ளிவிபர ரீதியாகவும் அணுக வேண்டும்.

புகையிலை  விவசாயத்தை கைவிடச் சொல்லும் படித்தவர்கள் மாற்று விவசாயத்தின் சந்தையை விசாயிகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். விவசாயச் சந்தை என்பது பாயை விரித்து மரக்கறியை அடுக்கி விற்பதல்ல என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.

மா.குருபரன்
21-10-2016

Friday, July 29, 2016

"இனவாதம்" இன்றைய உலக அரசியல் ஒழுங்கு

3 கருத்துக்கள்
உலக அரசியலின் ஒழுங்கை புலிகள் பின்பற்றத் தவறினார்கள் என புலிகள் மீது குற்றம் சாட்டும் அரசியல் மேதைகள், இன்றைய உலக அரசியல் ஒழுங்கை தமிழர்கள் இடத்தில் வெளிப்படையாக பேசுவதற்கு தயங்குவதற்கான காரணம் தெரியவில்லை.

உலக அரசியல் ஒழுங்கானது வல்லரசுகளான அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகளில் இருந்து ஆரம்பிக்கபட்டு ஐரோப்பிய நாடுகளினூடாக வழிநடத்தப்படுகிறது.

மூன்றாம் உலக நாடுகளின் இனவாத அரசியலானது சில்லறைத்தனமாக பேசப்பட்டாலும், வளர்ச்சியடைந்த நாடுகளின் இனவாதப் போக்கானது அரசியல் கலாச்சாரமாக உருவெடுக்கிறது. வல்லரசுகளின் அரசியல் கலாச்சாரத்திற்கு சமாந்தமாரக நகர்த்தப்படும் போராட்ட அரசியல்கள் இலகுவில் வெற்றியடைவது சாத்தியமான ஒன்று என்பது 21ம் நூற்றாண்டு படிப்பினை.

என்றுமில்லாத அளவிற்கு இன்று இனவாத அரசியல் மேற்குலக மற்றும் மத்தியகிழக்கு அரசியலில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது..

பின்வரும் சம்பவங்களை பாருங்கள்:


1. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகியமை:

உலக சட்டவியல்கள் பலவற்றின் ஆரம்பப் காணப்படும் பிரித்தானியா, தன்னை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விடுவித்துக் கொண்ட்டிருக்கிறது. அல்லது மக்களால் விடுவிக்கபட்டிருக்கிறது. "பிரித்தானியர்களின் இருப்பிற்கு பிற ஐரோப்பிய நாடுகளால் அச்சுறுத்தல் ஏற்படுகிறது" என்ற அச்சம் பிரித்தானிய மக்களிடத்தில் மேலோங்கி இருக்கிறது. "இணைந்து வாழுதல் சுய இருப்பிற்கு அச்சுறுத்தல்" என்ற எண்ணக்கரு மேலோங்கியிருக்கிறது. அதன் விளைவாக பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.



2. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்:
உலக வல்லரசான அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களிற்கு இருக்கும் ஆதரவு குறித்து ஆராய்வது இன்றைய காலகட்ட அரசியல் தன்மையை புரிந்து கொள்ள இலகுவாக இருக்கும் அடுத்த உதாரணம். ஹிலாரி கிளின்ட்டனுடன் எதிர்த்தரப்பில் போட்டியியும் றம்ட் டொனாட்டிற்கு சரிக்கு சமனான ஆதரவு மக்களிடத்தில் காணப்படுகிறது.

இங்கு கவனிக்க வேண்டியது றம்ட் இன் உரைகள். தான் அமெரிக்க ஜனாதிபதி ஆகியவுடன் பதினொரு மில்லியன்  முஸ்லீம் மற்றும் இதர குடியேற்றவாசிகளை நாட்டிலிருந்து அப்புறப்படுத்தவுள்ளதாகவும் இணைந்து வாழுதல் அமெரிக்கர்களின் எதிர்கால இருப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாகவும் சொல்கிறார். இந்த இனவாத கொள்கையை அமெரிக்கர்கள் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இருக்கிறார்கள் என்பதைத் தாண்டி அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலிலையே இனவாதம் ஒரு அரசியல் என்ற நிலை காணப்படுகிறது என்பதை நாம் சாதகமாக அணுக வேண்டும்.

3. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் நிலைப்பாடு:

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் என்றுமில்லாதவாறு "எம் இனம்,எம் அடையாளம்,எம் இருப்பு" என்ற எண்ணம் பரவலாக வளர்ந்து வருகிறது. பிரான்ஸ்,ஜேர்மன் போன்ற நாடுகளில் இனவாத அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு அதிகரித்கொண்டே இருக்கிறது.


தமிழர்கள் என்ன செய்யப் போகிறோம்!!

உலக அரசியலின் இன்றைய நிலைப்பாடு முற்று முழுதாக "சுய அடையாளங்களையும் இருப்பபையும் தக்கவைத்துக் கொள்ளல் மற்றும் பாதுகாத்தல்" என்ற வரையறைக்குள் நவீன இனவாத அரசியலாக பரவலாக்கபட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த அரசியல் போக்கை சாதகமாக பயன்படுத்தி எமக்கான இருப்பையும் சுய அடையாளங்களை பாதுகாப்பதற்கான பொறி முறையையும் உருவாக்க வேண்டும்.

தெற்காசிய வியாபாரச் சந்தையை கையப்படுத்துவதற்காக மேற்குலகால் திணிக்கப்பட்ட "இணக்க அரசியலில்" இருந்து வெளியாகிய சுய இருப்பை உறுதிப்படுத்தும் அரசியலை வீரியமாக செய்ய வேண்டும்.

சுய இருப்பை உறுதி செய்வதற்கான அரசியல் என்பது வன்முறை அல்ல என்பதை மேற்குலக நடைமுறைகள் மூலம் புரிந்து கொண்டு அதை மக்களிடத்தில் கொண்டு சென்று மக்களை தயார்ப்படுத்த வேண்டும்.


உலக ஒழுங்கை எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம்!!!


மா.குருபரன்
29-07-2016

Monday, April 11, 2016

போராளிகளின் சாவும் தமிழர்கள் மேல் திணிக்கப்படும் பொருத்து வீடுகளும்

0 கருத்துக்கள்
காலத்திற்கு காலம் நிலமைகளை(Trend) திசை திருப்பி அதனூடு சாணக்கியமாக அரசியல் செய்வதில் ரணில் கில்லாடி என்பதற்கு அப்பால் அந்த அரசியலினூடு தமிழர்களை பிரித்தாழ்வதிலும் சாமர்த்தியசாலி.

புனர்வாழ்வளிக்கபட்ட போராளிகள் புற்றுநோயால் மடிந்துகொண்டிருப்பது குறித்த பார்வை வலுக்கும் போது அதை "பொருத்து வீடுகள்" மூலம் திசை திருப்பிவிடுவதில் "ரணில்-மைத்திரி நல்லரசு" மிகத் தீவிரமாக இறங்கியிருக்கிறது.

2009 ற்கு பிறகு வடக்கில் அதிகரித்திருக்கும் புற்று நோய் மரணங்கள் குறித்து தமிழர் தரப்பு அரசியல்வாதிகள் வாய்திறக்க மறுக்கின்றனர். புற்று நோயால் பாதிக்கபட்டிருக்கும் புனர்வாழ்வளிக்கபட்ட போராளிகள் மற்றும் மக்களை வெளிநாட்டு மருத்துவ நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்வதோடு வடக்கில் அதிகரித்திருக்கும் புற்றுநோய்க்கான மூல காரணத்தை பகிரங்கப்படுத்த கோரிக்கை வைக்க வேண்டும்.

புற்றுநோய் என்பது அரசியல் கொலைகளுக்கு பாவிக்கப்படும் ஆயுதமாக உலகின் பல இடங்களில் காணப்படும் நிலையில் புனர்வாழ்வளிக்கபட்ட போராளிகளின் சாவுகள் சந்தேகத்தை உருவாக்குவது தவிர்க்கப்பட முடியாதது


சம்மந்தர் மற்றும் டக்கிளஸ் தேவானந்தா முதல் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வரை இந்த புற்றுநோய் விடையத்தில் அதீத மௌனம் செலுத்திவருகின்றனர். வடக்கில் அதிகரித்திருக்கும் புற்றுநோய் குறித்து சர்வதேச ஆய்வு மற்றும் விசாரணை செய்ய வேண்டும் என்ற தொடர்ச்சியான போராட்டங்களை தமிழர் தரப்பு செய்ய முன்வர வேண்டும்.

மக்களுக்கான அரசியல் செய்ய தயங்கின் இந்த தலமைகள் அரசியலை விட்டு ஒதுங்க வேண்டும்.

பொருத்து வீடுகள்
புற்றுநோய் சாவுகள் குறித்த செய்திகளின் முக்கியத்துவத்தை மறைப்பதற்காகதான் இந்த பொருத்து வீடுகள் குறித்த சர்ச்சை முன்னிலைப்படுத்தப்பட்டாலும் பொருத்துவீடுகளின் பின்னால் உள்ள அரசியல் மிக மோசமானது.

டியுரா (Durra board) ரக மூலப்பொருட்களால் தயார்ப்படுத்தப்படும் இவ்வகையான வீடுகள் அதிக அளவில் இயற்கை அழிவுகளுக்கு உள்ளாகும் இந்தோனேஷியா பிலிப்பின்ஸ் போன்ற நாடுகளிலேயே பயன்படுத்தப்படுகிறது.

இவ்வகையான வீடுகளின் முழுசெயற்திறனானது ஆகக் கூடியது 15 தொடக்கம் 20 ஆண்டுகளே. இலங்கைபோன்ற நாடுகளில் இந்த வீடுகள் இராணுவ தேவைகளுக்காகவே அறிமுகப்படுத்தபட்டது. சராசரி 600 சதுர அடி அளவு வீடு ஒன்றை முழுமையாக நிர்மானிப்பதற்கு அண்ணளவாக 12 லட்சம் (1.2 மில்லியன்) இலங்கை ரூபாய்கள் தேவைப்படும்.

ஆக ஆகக் குறைந்தது 12 லட்சம் இலங்கை ரூபாய்கள் தேவைப்படும் இந்த பொருத்துவீடுகளை தமிழர் தாயகத்தில் நிர்மாணிப்பதற்கு எதற்காக இலங்கை இந்திய அரசாங்கங்கள் அதீத கவனம் செலுத்துகின்றன? பாரிய இயற்கை அழிவுகளுக்கு உள்ளாகும் மலையக மக்களுக்கு கூட சிபாரிசு செய்யப்படாத இந்த பொருத்து வீடுகளை வடக்கில் எதற்காக திணிக்க வேண்டும்.

பொருத்து வீடுகளிற்கு செலவழிக்கும் பணத்திற்கு அதே அளவிலான கல் வீடுகளை பயனாளர்களின் உதவியுடன் கட்ட முடியும்.


2007 இல் பொருத்து வீடுகள் சம்மந்தமான போட்டி ஒன்றிற்கு செய்யப்பட்ட மாதிரி வீடு. இதன் Estimation team இல் நானும் பங்குபற்றியிருந்தேன். 
பொருத்து வீடுகளை நிர்மாணிக்க பயன்படுத்தப்படும் பொருட்களின் (Material) பட்டியல் மற்றும் ஒரு வீட்டிற்கான மொத்த செலவின் பட்டியலை சிறிலங்கா அரசு மக்களுக்கு வெளிப்படுத்துமா? இந்த வீடுகளின் உத்தரவாத காலத்தை (Warranty Period) அரசு வெளிப்படுத்துமா?

"ஒருவனை வீழ்த்த வேண்டும் என்றால் அவனின் ஆசைகளை தூண்ட வேண்டும்" என்ற நடை முறை உலக ஒழுங்கிற்கு இணங்க மக்களின் நலிந்த வாழ்வை சாதகமாக பயன்படுத்தி மக்களுக்கு தற்காலிக ஆசைகளை தூண்டி தமது அரசியலை பக்காவாக செய்கிறது ".

இந்த வீடுகளின் உத்தரவாத காலம் முடிந்தவுடன் இந்த வீடகள் திருத்த வேண்டிய நிலமை ஏற்படும் பட்சத்தில் அதற்கான பொருட்கள் உள்ளுர் சந்தைகளில் கிடைக்குமா? அதற்கான செலவுகளை பயனாளிகள் எப்படி பொறுப்பர்?

வெறுமனே தற்காலிக ஆசைகளில் எடுபடாமல் பொருத்து வீடுகளை நிராகத்து அந்த பணத்திற்கு சரியான பொருத்தமான வீடுகளை வடக்கிற்கு கொண்டுவருவதும் வடக்கு மாகாண அரசின் வெற்றிதான். அதை த.தே.கூட்டமைப்பின் வடமாகாண அரசு செய்ய வேண்டும்.

அதேநேரத்தில் டக்களஸ் தேவானந்தா மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்களும் மக்களுக்கான "சரியான" வீடுகளை வலியுறுத்தி போராட்டஙக்ளையும் கோரிக்கைகளையும் முன் வைக்க வேண்டும்.

மா.குருபரன்
11-04-2016


Saturday, November 21, 2015

சீனாவை போருக்கு இழுப்பது ஐ.எஸ்.ஐ.எஸ் ஆ இல்லை அமெரிக்காவா!!!

1 கருத்துக்கள்


சர்வதேச வல்லரசாக வேகமாக வளர்ந்துவரும் சீனா பிற நாடுகள் மீது நேரடியான ராணுவச் செல்வாக்கைச் செத்தாமல், தேவையான நாடுகள் மீது பொருளாதார ரீதியாக ஊடுருவி அந்தந்த நாடுகளின் அரசியல் மீது செல்வாக்குச் செலுத்தும் இராஜதந்திரப் பாணியை முன்னெடுத்துவருகிறது.


தென்கிழக்காசியா, மத்தியகிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளில் சீனாவின் சந்தை மிகப் பலமாக மாற்றமடைந்து வருகிறது. இந்த பொருளாதார போரானது நீண்டகாலத்தில் மேற்குலகின் சந்தை வலுவையும் வல்லரசுப் போக்கையும் நிட்சமாக ஆட்டம் காணச் செய்யும்.

இந்த நிலையில் போர்குறித்து நழுவல் போக்கை கடைப்பிடித்துவரும் சீனாவை போருக்கு இழுத்து வந்து அவர்களின் போர்த்திறன் பற்றிய அளவீட்டை செய்ய வேண்டிய தேவை மேற்குலக நாடுகளுக்கு இருக்கிறது.

சீனாவை மேற்குலகு இழுக்கும் போரானது வித்தியாசமானது. இந்த களம் இஸ்லாமிய ஜிஹாதிகளுக்கு எதிரானது. இங்கு இரண்டு நாடுகள் மோதப் போவது கிடையாது. ஆனால் மேற்குலகின் ஆயுதங்களும் சீனாவின் ஆயுதங்களும் மோதப் போகின்றன. அதற்கு முதல் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிரான போரில் சீனா என்னமாதிரியான நிலைப்பாட்டை எடுக்கும் என்பதே இப்போதுள்ள கேள்ளவி.

சீனாவும் இஸ்லாமும்

சீனாவில் அதிகளவில் பின்பற்றப்படும் மதம் என அறியப்பட்டிருந்தாலும் பள்ளிவாசல்களினூடாக இஸ்லாமிய கற்கை நெறிகள் தடை செய்யபடப்டிருந்தன. கம்யூனிச கல்வியும் கொள்கைகளும் கற்பிக்கபட்டு வந்தமையினால் இஸ்லாமிய மதம் சார்ந்த சமூக கல்வி நெறிகள் தடை செய்யபட்டிருந்தன என்று சொல்லலாம்.

மத உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டிருந்தாலும் சீனாவில் இஸ்லாமிய கொள்கைவாதம் தலைதூக்கமால் இருக்க வேண்டும் என்பதில் கம்யூனிச ஆட்சியாளர்கள் எப்போதும் அவதானமாக இருக்கிறார்கள்.

சீன கம்யூனிஸ ஆட்சியாளர்கள் நினைத்தது போலவே இஸ்லாமிய கொள்கைவாதம் படிப்படியாக சீனாவில் தலைதூக்க ஆரம்பித்தது.

ஷிஞ்ஜியாங் எனப்படும் சீனாவின் தன்னாட்சி மாநிலத்தின் எல்லை நாடானா மொங்கோலியா ஊடாக இஸ்லாமிய கொள்கைவாதம் சீனாவிற்குள் ஊடுருவ முயற்சிகள் செய்யப்பட்டமை சீனாவின் இராணுவத்தால் முடியடிக்கபட்டிருக்கின்றன.

இப்படி நாளுக்கு நாள் இஸ்லாமிய ஜிஹாதிகள் சீனாவிற்குள் செல்வாக்கை அதிகரிக்க முயற்சிக்கும் வேளையில்தான் சீன அரசு இஸ்லாமியர்களின் நோன்பை தடை செய்திருக்கிறது.

தவிர இஸ்லாமிய ஜிஹாதிகள் என்ற சந்தேகத்தின் பெயரில் பல இஸ்லாமியர்களை சுட்டுக் கொன்றிருக்கிறது.


அதாவது கம்யூனிச கொள்கையை கற்பித்து அதனூடாக அரசை தக்க வைத்திருக்கும் சீன அரசிற்கு இஸ்லாமிய கொள்கைவாதமானது முரணானது. ஷரியா சட்டம் உள்ளிட்ட பல இஸ்லாமிய கொள்கைவாதமானது சீன கம்யூனிசிய சட்டத்திற்கு முரணானது. அதனால் சீனாவில் இஸ்லாத்தை எப்போதும் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்பது அந்த நாட்டின் எழுதப்படாத சட்டம்

(ஜப்பானிலும் இஸ்லாம் தடை அல்லது அதற்கு சமனான சட்டம்).


சீனாவின் நழுவல் போக்கு

சீனாவிற்குள் ஊடுருவ எத்தனிக்கும் இஸ்லாமிய ஜிஹாதிகள் பற்றி சீனா அறிந்து வைத்திருந்தாலும் அவர்கள் மீது நேரடி இராணுவ தாக்குதல்களை செய்ததற்கான எந்த ஆதாரங்களும் இன்றுவவரை இல்லை.

இஸ்லாமிய ஜிஹாதிகளுக்கு உதவ நினைக்கும் தனது நாட்டு பிரஜைகளுக்கு மிகக் கடுமையான தண்டனையை வழங்கி இஸ்லாமிய தீவிரவாதத்தை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது சீனா.


----------------------------------------------------------------------------------------

சீனாவின் வெளிநாட்டு பொருளாதார இலக்குகள் மீது, ராஜதந்திரிகள் மீது, சீன பிரஜைகள் மீது இலக்கு வைப்பதன் மூலம் இஸ்லாமிய ஜிஹாதிகளுக்கு எதிராக சீனாவும் நேரடியாக களத்தில் இறங்க வேண்டிய சூழ்நிலை உருவாகிக் கொண்டுவருகிறது.

இந்த திட்டமிட்ட செயலானது மேற்குலகின் நிகழ்ச்சி நிரலா அல்லது இஸ்லாமிய ஜிஹாதிகளின் நிகழ்ச்சி நிரலா என்பது சீனாவின் அடுத்தகட்ட நகர்வுகளின் இருந்து அறிந்து கொள்ள முடியும்.



 ======================================================
இஸ்லாமிய தேசத்தில் யேசுவைத் தொழுதவன் கதி

இஸ்லாமிய கொள்கை வாதத்தில் எதிர்காலத்தில் நாடுகள் மாற்றங்களை கொண்டுவரக் கூடிய சூழல் உருவாக வாய்ப்பிருக்கிறது. அதாவது இஸ்லாமை ஒரு மார்க்கமாக மாத்திரமே (பெளத்தம் போல) அணுக கூடிய சட்டங்கள் இயற்றப்பட வாய்ப்பிருக்கிறது.

உதாரணத்திற்கு சிங்கள இனத்தவர் ஒருவருக்கு இஸ்லாம் மார்க்கத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அவர் அதை பின்பற்ற தொடங்கினால் அவர் மதமாற்றம் மட்டுமல்ல இனமாற்றமும் செய்யப்படுகிறார். சிங்களவர் என இருந்த அவரின் இன அடையாளம் முஸ்லீம் என மாற்றப்படுகிறது.

அதாவது இஸ்லாமிய மதம் என்பது இன அழிப்பின் ஆரம்பக்கூறை தொடங்கி வைக்கிறது என்ற சிந்தனை இப்போது உலகளவில் வலுப்பெற்று வருகிறது.

முஸ்லீம் என்பது மற்றைய இனங்களை அழித்து இஸ்லாமியத்தால் கட்டப்படும் செயற்கையான இனம் என்பதால் அற்குள் மனிதம் இல்லாமல் செய்யப்படுகிறது என்ற கருத்தியலும் உலகளவில் வலுப்பெற்று வருகிறது.

இஸ்லாம் அன்பையும், ஒழுக்கத்தையும் போதித்தாலும் அதற்குள் புதைந்திருக்கும் இன அழிப்புக் கூறுகள் மீது சந்தேகம் எழுந்திருப்பதாக பலர் கருத்து வெளியிடுகிறார்கள்.


இஸ்லாமிய ஜிஹாதிகள்


===========================================================

எல்லா அரசுகளும் தமக்கானதை மட்டுமே செய்திகள் ஆக்குவர். ஆனால் ஆயுதங்களால் அழியப்போவது அல்லாவோ, புத்தரோ, யேசுவோ, சிவனோ கிடையாது. அப்பாவிகளும் குழந்தைகளுமே இந்த யுத்தத்தில் மாளப்போகின்றனர்.

புகைப்படக் கருவியை துப்பாக்கி என நினைத்து சரணடையும் சிரியக் குழந்தை

+ கருத்துப் பிழைகள் இருப்பின் கீழுள்ள கருத்திடும் பகுதியிலோ அல்லது webkuru@gmail என்ற மின்னஞ்சல் முகவரிலோ தெரியப்படுத்துங்கள்.

மா.குருபரன்
21-11-2015